First Published : 16 Jul 2010 12:27:35 PM IST
Last Updated :
திருச்சி, ஜூலை 15: திருச்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க முடியாமல் திணறி வருகிறது மாநகரக் காவல் துறை. திருச்சி மாநகரைப் பொருத்தவரை வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை, இரு சக்கர வாகனங்கள் திருட்டு, தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பு, தனியாகச் செல்லும் ஆண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு குறைந்தது மூன்று வழிப்பறி மற்றும் நகைப் பறிப்பு சம்பவங்களாவது நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. சில நேரங்களில் ஒரே நாளில் பல இடங்களில் கொள்ளையும், நகைப் பறிப்பும் தொடர்ந்து நிகழ்வதும் உண்டு. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, தற்போதைய காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தி மாநகர மக்களிடையே நிலவுகிறது. ஜூன் மாதத்தில் மட்டும் திருச்சி மாநகரப் பகுதியில் நடந்த நகைப் பறிப்புச் சம்பவங்களில் 200 பவுன் தங்க நகைகள் பறிபோய்விட்டன. ஆனால், இவையெல்லாம் புகார் அளவில் மட்டுமே இருக்கின்றன. தொடக்கத்தில் நகைப் பறிப்புச் சம்பவங்களைத் தடுக்க போலீஸôர் தீவிரமாகச் செயல்பட்டது உண்மை. ஆனால், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் வேகத்துக்கு போலீஸôரால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். தற்போதைய மாநகரக் காவல் ஆணையராக இருக்கும் கே. வன்னியபெருமாள் பொறுப்பேற்றவுடன் கொள்ளை, நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க தனிப் பிரிவுகளை ஏற்படுத்தினார். இருப்பினும், இதுவரை போதிய பலன் கிடைக்கவில்லை. நீண்ட...(?) விசாரணைக்குப் பிறகு நகைப் பறிப்புச் சம்வங்களில் ஈடுபடுவோர் அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளில் சென்று நகையைப் பறித்தவுடன் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிடுவதை போலீஸôர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, திருச்சி மாநகரில் 10 போலீஸôரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 5 அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிளை வழங்கியது மாநகரக் காவல் துறை. ஒரு கட்டத்தில் நகைப் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிக்க முயன்றபோது கொள்ளையர்கள் சென்ற வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீஸôர் ஏமாற்றமடைந்தனர். பல தனிப் படைகள், பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தல், போலீஸôருக்கு அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் எனப் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், காவல் துறையால் நகைப் பறிப்பு சம்பவத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதுவரை நடைபெற்ற நகைப் பறிப்பு சம்பவங்களையெல்லாம் போலீஸôர் ஆராய்ந்த போது அதில் கிடைத்த ஒரே நம்பிக்கைக்குரிய தகவல் குற்றவாளிகள் 20 முதல் 30 வயதுக்குள் வரை உள்ளவர்கள் என்றும், அவர்கள் பயன்படுத்துவது ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த அதிவேகமாகச் செல்லும் மோட்டார் சைக்கிள் என்பதும்தான். இருப்பினும், குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஓர் இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கிறது. பழைய குற்றவாளிகள் துணையோடு புதியவர்கள் சிலரும் இந்தத் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், தனிப் படையில் இடம்பெற்று உயர் அதிகாரிகளில் மனதில் நம்பிக்கை (?) பெற்றுள்ள சிலர், இந்தத் தகவல்களை மறைக்க முயலுவதாகவும் அண்மைக்காலமாக போலீஸôர் மத்தியில் ஒரு பேச்சு இருந்து வருகிறது. திருச்சி மாநகரில் 5 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகள், அவ்வப்போது நடத்தப்படும் வாகனச் சோதனையின் போதும் குறிப்பிட்ட அந்த ரக மோட்டார் சைக்கிளை கண்காணித்தாலே குற்றவாளிகள் எளிதில் சிக்கிவிடுவார்கள் என்கின்றனர் பெயர் கூற விரும்பாத சில போலீஸôர். நகைப் பறிப்பு சம்பவங்களைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வரும் காவல் துறை சில அனுபவமிக்க போலீஸôரின் கருத்துகளையும் கேட்டறிந்து செயல்பட்டால், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவதோடு, தொடர்ந்து சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியும் என்பதே திருச்சி மாநகர மக்களின் எதிர்பார்ப்பு.