திங்கள், 27 ஜூன், 2011


வியாழன், 16 ஜூன், 2011


ஞாயிறு, 12 ஜூன், 2011

குற்றாலம் அழைக்கிறது..!

தி. இன்பராஜ்
First Published : 12 Jun 2011 02:46:29 PM IST


ஜூன் மாதம் தொடங்கிவிட்டாலே குளுமையை விரும்புவோரின் நினைவுக்கு வருவது தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் "குளு குளு குற்றாலம்'தான். ஆகஸ்ட் மாதம் இறுதிவரை ஏழைகள், பணக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் குவியும் ஒரே இடமாகத் திகழ்வது குற்றாலம் மட்டுமே.இங்குள்ள அருவிகளில் குளிப்பதே தனி சுகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மூலிகைகள் கலந்து வருவதால் குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீருக்குத் தனி மவுசு உண்டு.தமிழ் சிற்றிலக்கியமான "குற்றாலக் குறவஞ்சி'யில் குற்றாலத்தின் சிறப்புகள் குறித்து பல பாடல்கள் உள்ளன. சங்க காலத்தில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்ட குற்றாலத்துக்கு தேனூர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதும் குற்றாலத்திலும் சாரல் விழத் தொடங்கிவிடும். இந்தக் காலகட்டத்தைக் "குற்றால சீசன்' என அழைப்பார்கள். குற்றாலச் சாரல் சுற்றுவட்டாரப் பகுதி மக்களையும் மகிழ்விப்பது உண்டு. இங்கு அமைந்துள்ள திருக்குற்றாலநாதர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும்.திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், தென்காசியில் இருந்து 6 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும் குற்றாலம் அமைந்துள்ளது.குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மொத்தம் 9 அருவிகள் உள்ளன. இவற்றில் பாலருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவை தவிர மற்ற 6 அருவிகளும் மக்கள் அதிகம் விரும்பும் அருவிகளாக உள்ளன. குறிப்பாக, பேரருவியில் அதிகக் கூட்டம் காணப்படுவது உண்டு.பேரருவி: "மெயின் பால்ஸ்' என அழைக்கப்படும் பேரருவிதான் குற்றாலத்தில் பிரதானமானது. ஏறத்தாழ 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான துறையில் விழுந்து, பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது இந்த அருவி. தண்ணீர் அதிகம் வரும் காலங்களில் இந்த அருவியில் குளிக்க தடை விதிக்கப்படும். பெண்கள் குளிக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.செண்பகாதேவி அருவி: பேரருவியில் இருந்து மலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது செண்பகாதேவி அருவி. இந்த அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்பதால் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழும் இந்த அருவியின் கரையோரத்தில் செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது.தேனருவி: செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ள தேனருவியின் அருகே பாறைகளுக்கு நடுவில் அதிக அளவில் தேன்கூடுகள் காணப்படும். இதனால் தேனருவி என அழைக்கப்படுகிறது. மிகவும் அபாயகரமான இந்த அருவியில் குளிக்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.ஐந்தருவி: பேரருவிக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்புவது ஐந்தருவியைத்தான். பேரருவியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அருவி, திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து விழுவதால் ஐந்தருவி என அழைக்கப்படுகிறது.இதில், பெண்கள் குளிப்பதற்கென்று ஒரு கிளை அருவியும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்காக மூன்று கிளை அருவிகளும் உள்ளன. ஐந்தாவது கிளையில் தண்ணீர் வருவது குறைவு.பழத்தோட்ட அருவி: முக்கியஸ்தர்கள் அருவி என்ற பட்டப் பெயரோடு அழைக்கப்படும் இந்த அருவி, ஐந்தருவியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வி.ஐ.பி.களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் சாதாரண மக்கள் இந்த அருவியின் அருகில் செல்லவே முடியாது.பழைய குற்றால அருவி: குற்றாலம் பேரருவியில் இருந்து கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது பழைய குற்றாலம். பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளிப்பவர்கள் நிச்சயமாக பழைய குற்றால அருவியிலும் நீராடிச் செல்வது வாடிக்கை.படகு சவாரி: ஐந்தருவிக்கு அருகே அமைந்துள்ள குளத்தில் படகு சவாரி செல்வது தனி சுகம். இந்தக் குளம் விவசாய குளம் என்பதால் சீசன் காலங்களில் மட்டும் படகு சவாரி நடைபெறும்.

திங்கள், 6 ஜூன், 2011