ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

சேவை: அந்த இறுதி நாட்களில்...!


First Published : 22 Aug 2010 05:06:02 PM IST


சாகிற நாள் தெரிஞ்சா வாழ்கிற நாள் நரகமாகிவிடும்' என்பார்கள். ஆனால், நோயினால் பாதிக்கப்பட்டு சாகிற நாள் தெரிந்தவர்களுக்கு அவர்களுடைய கடைசிக் காலம் வரை ஓரளவு மன நிம்மதியோடு வாழ்வதற்கான பணிகளைச் செய்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர். "சாந்தாலயா அரவணைப்பகம்' என்ற பெயரில் திருச்சி தில்லை நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த அரவணைப்பு மருத்துவமனையை நண்பர்கள் சிலர் உதவியோடு நடத்தி வருகிறார் மருத்துவர் கே. கோவிந்தராஜ்.இந்த அரவணைப்பகத்தில் யாரைச் சேர்த்துக் கொள்வீர்கள்?""ஒருவருக்கு குணப்படுத்த முடியாத நோய் என வந்துவிட்டால் அவருக்கு முதலில் தேவைப்படுவது குடும்பத்தினரின் அரவணைப்புதான். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் அதைச் செய்யத் தவறிவிடுகிறோம்.எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, தொழுநோய், தீக்காயம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்குக் குறிப்பிட்ட நிலைக்கு மேல் சிகிச்சை அளிப்பது பலனளிக்காது என்பது மருத்துவர்களுக்கு நன்கு தெரியும்.இத்தனை நாட்களுக்கு மேல் அவர்கள் உயிர் வாழ்வது சாத்தியமில்லை என அவர்களுக்கான நாட்களையும் மருத்துவர்கள் குறித்துவிடுவார்கள். இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உறவினர்களால் பராமரிக்க முடியாமல் எத்தனையோ பேர் ஆதரவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உறவுப் பாலமாக அமைவதுதான் இந்த அரவணைப்பகம்.இங்கு அளிக்கப்படும் சிகிச்சைதான் என்ன?பெரிய அளவில் சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை. பொதுவாக புற்றுநோய், சிறுநீரக நோய்களைப் பொறுத்தவரையில் கடைசிக் காலத்தில் நோயாளிகள் அந்த நோயினால் உண்டாகும் வலியை தாங்க முடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிப்பவர்களின் வலியைப் போக்கும் வகையில் அவர்களுக்கு மருந்துகள் வழங்கி போதிய உணவுகளையும் வழங்கி வருவதுதான் எங்களது அரவணைப்பகத்தின் பங்கு. இதற்காக இரண்டு பெண் ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர்.தற்போது 7 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.குறிப்பிட்ட காலம் வரை இங்கே தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிலர், தங்களது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஆசைப்படுவதும் உண்டு. அவர்களிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் நாங்கள் அனுப்பிவைத்துவிடுவோம். தேவைப்பட்டால், அவர்கள் விரும்பினால்  மீண்டும் இங்கு வந்து தங்கிக் கொள்ளலாம்.எப்போது ஆரம்பித்தீர்கள்? எவ்வளவுபேர் இங்கே தங்கியிருக்கின்றனர்?25-01-2009 அன்று அரவணைப்பகத்தை நாங்கள் திருச்சியில் தொடங்கினோம். இதுவரை 289 பேர் எங்களின் பராமரிப்பில் இருந்துள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் இப்போது உயிருடன் இல்லை.நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் 6 மாதத்துக்கு மேல் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் கூறினால் மட்டுமே இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவார். எங்களிடம் சேர்ந்தவர்களில் மிகவும் வயது குறைந்தவர் 10 வயதே ஆன ஹேமா என்ற சிறுமி.ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சில மாதங்களில் உயிரிழந்துவிட்டார். இங்கு வருபவர்களில் பெரும்பாலானோருக்கு நாம் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தாலும் அவர்கள் மனதில் அந்த எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம். அதில்தான் எங்கள் வெற்றி உள்ளது.நன்கொடை வசூலித்து நடத்துகிறீர்களா?நாங்களாக யாரிடமும் சென்று நன்கொடை வசூலிப்பதில்லை. கடந்த ஓராண்டாக நாங்கள் சிறப்பாக நடத்தி வருவதை அறிந்த சிலர் பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்ச்சிகளின்போது தங்களுடைய தகுதிக்கேற்ப நிதியுதவி செய்து வருகின்றனர்.பாலசுப்பிரமணியம் என்பவர்தான் அரவணைப்பகம் நடத்த அவரது வீட்டை இலவசமாக வழங்கினார். மேலும் பலர் உணவளிப்பதற்குத் தேவையான பொருள்களை வழங்கி வருகின்றனர். இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் விஜயலட்சுமி உதவி செய்து வருகிறார்.உங்களது எதிர்காலத் திட்டம்?எங்களது அரவணைப்பகத்துக்குப் போதிய இடவசதி இல்லை. பெரிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட அரவணைப்பகம் நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். விரைவில் இந்த நோக்கம் நிறைவேறும்.திருச்சி மாவட்டம், நொச்சியத்தில் 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்துள்ளோம். விரைவில் கட்டடப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.திருச்சி தில்லைநகரில் நடத்தப்பட்டு வரும் சாந்தாலயா அரவணைப்பகத்தைப் பற்றிய மேலும் தகவல்களை அறிய  www.sh​anth​all​aya.org என்ற இணையதள முகவரியையும், sh​anth​all​ay​a​@gm​ail.com என்ற இ-மெயில் முகவரியையும் அணுகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக