ஞாயிறு, 13 ஜூன், 2010

தோள் கொடுக்கும் தோரியம்...

தி. இன்பராஜ்

  இன்றைய தினம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பிரச்னையாக இருப்பது மின் வெட்டுதான்.
தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைத் தீட்டாததால் போதிய உற்பத்தி இல்லாமல் மின் தட்டுப்பாடு ஏற்படுவதாகப் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
  நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் மூலம் 66 சதமும், நீர் மின் நிலையங்கள் மூலம் 17 சதமும், அணு மின் நிலையங்கள் மூலம் 15 சதமும், காற்றாலைகள் உள்ளிட்ட மற்ற ஆதாரங்கள் மூலம் 2 சதமும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் கிடைக்கும் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் 25 சதத்தை மட்டுமே நிறைவு செய்கிறது.
உலகில் பெட்ரோல், நிலக்கரி ஆகியவற்றின் வளம் குறைந்து வரும் நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் மாற்று எரிபொருள் உற்பத்தி செய்யும் கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.
குப்பையிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கலாம் என்று நாம் கூறினாலும், தற்போதைய தேவைக்கு அவை போதுமானதாகாது.
மின் உற்பத்திக்கு நாம் பல வழிகளைத் தேடி வரும் நிலையில், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் தோரியம் மூலம் தேவைக்கும் அதிகமான மின் உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உலக நாடுகளில் மொத்தமுள்ள தோரியம் 25 லட்சத்து 73 ஆயிரம் டன். இதில், 3 லட்சத்து 19 ஆயிரம் டன் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது. உலகளவில் 12 சதத் தோரியம் நம்நாட்டில் உள்ளது.
ராமேசுவரம் உள்ளிட்ட கடல் பகுதியில் கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பதாகக் கூறுகின்றன தொல்லியல் ஆய்வுகள். தமிழகக் கடலோரப் பகுதிகளான தூத்துக்குடி, ராமேசுவரம், மிடாலம், காணிமடம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தோரியம் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அணுசக்கி ஆய்வில் யுரேனியம்} 233, யுரேனியம்} 235, புளூட்டோனியம்} 239 என்ற மூன்று நிலைகள் உள்ளன. இதுதவிர, இந்திய அணுசக்தித் திட்டத்துக்கு அடித்தளமாக இருப்பது தோரியம் என்கிறார் திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் இரா.ஆ. ஜெய்குமார்.
தோரியம் பற்றியும் அதன் பயன்பாடுகள் குறித்தும் அவர் மேலும் கூறியது:
ஷஅணு உலையில் தோரியத்தை பயன்படுத்தும் போது அவை நியூட்ரானை உள்வாங்கி யுரேனியம்} 233 ஆக மாறும். அப்போது கிடைக்கும் மின்சார அளவானது யுரேனியத்தைத் தனியாகப் பயன்படுத்தும்போது கிடைப்பதைவிட 7 மடங்கு கூடுதலாக நமக்குக் கிடைக்கும்.
தோரியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் மற்றும் அணுசக்தி தயாரிக்கும் திறமை உலகில் இந்திய விஞ்ஞானிகளால் மட்டுமே சாதிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
நம்நாட்டில் தற்போது உள்ள 22 அணு உலைகளில் 70,000 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அணு உலைகளை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் லட்சகணக்கானோருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தோரியத்தைப் பயன்படுத்தும் அணுசக்தி திட்டத்துக்கான ஆரம்ப முதலீடு அதிகமாக தெரிந்தாலும், நமக்கு நீண்ட கால நன்மை கிடைக்கும். பொருளாதாரம் வளரும் அளவுக்கு குறைந்த செலவில் நம்மால் மின் உற்பத்தி செய்ய முடியும்.
கடலுக்கு அடியில் 36 ஆயிரம் டன் தோரியம் எப்படி வந்தது என்பது ஆச்சரியமான விஷயம்தான்.
பெருங்கடல்களில் உள்ள கடல் குன்றுகளில் பிளவுகள் வழியாக ஊடுருவும் குளிர்ந்த கடல் நீரின் வெப்பநிலை கடல் எரிமலை குளம்புகளால் அதிகரித்து இரும்பு, மாங்கனீஸ், தாமிரம், நிக்கல், பெர்ரஸ் போன்ற உலோகங்கள், உப்புகளை கரைத்து பிரிக்கிறது.
இந்தக் கடல் நீர் 380 டிகிரி செல்சியஸ் வெப்ப நீர் ஊற்றாக வெளியில் வருகிறது. கரைந்த உலோக உப்புகள் சில சமயங்களில் உலோக சல்பைடு தாதுக்களாகப் படிகின்றன. இந்தத் தாதுக்களில் தங்கம் ஏராளமாகக் காணப்படுகிறது.
இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்குச் சொந்தமான பொருளாதாரக் கடல் மண்டலத்தில் 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டரில் ஒரு கோடி டன் தாமிரம், கோபால்ட், நிக்கல் மற்றும் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் அண்மையில் 36 ஆயிரம் டன் தோரியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை கனிம உலோகங்களிலிருந்து பிரித்தெடுக்க பல கோடி ரூபாய் செலவாகும்.
இந்தத் தோரியம் மூலம் நம் தேவைக்கு ஏறத்தாழ 250 ஆண்டுகளுக்கும் மேல் பயன்படுத்தும் வகையில் மின்சாரம் தயாரிக்கலாம்' என்றார் பேராசிரியர் ஜெய்குமார்.
தோரியம் என்ற மூலப்பொருள் நம்நாட்டில் அதிகளவு உள்ள நிலையில், கூடுதல் அணு மின் உலைகள் அமைத்து மின் உற்பத்தியை அதிகரிப்பது அரசின் தற்போதைய முக்கிய பங்காகும்.
நம் நாட்டில் கிடைக்கும் தோரியம் நமக்காகத் தோள்கொடுக்க காத்துக் கொண்டிருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்துவது நம் விஞ்ஞானிகளின் கையில்தான் உள்ளது.

(2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திங்கள்கிழமை தினமணியில் பிரசுரமானது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக