புதன், 9 ஜூன், 2010

"மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு?


First Published : 09 Jun 2010 10:10:57 AM IST


திருச்சி, ஜூன் 8:  கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை மீண்டும் திருச்சியிலிருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.விழுப்புரம்} மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்துத் தொடங்கியதும், தற்போது கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் "மலைக்கோட்டை' விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பது ரயில்வே நிர்வாகத்தின் நீண்ட... (?) கால அறிவிப்பு.ஆனால், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயில்களில் 90 சத ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் இடையே திருச்சி, விருத்தாசலம் வழியாக தற்போது இயக்கப்பட்டு வரும் "செந்தூர்' வாராந்திர விரைவு ரயிலும் (வண்டி எண். 6736/6735) வரும் ஜூலை 29-ம் தேதி முதல் மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது.   மேலும், ராமேசுவரத்தில் இருந்து திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலும் (வண்டி எண். 6701/6702) ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக சென்னை செல்வதற்கு போதுமான ரயில்கள் இயக்கப்படத் தொடங்கிவிட்டன.இருப்பினும், விழுப்புரம்- மயிலாடுதுறை அகலப் பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கி இரண்டு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் "மலைக்கோட்டை' விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவது குறித்த எந்த அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. "மலைக்கோட்டை' விரைவு ரயிலில் மொத்தமுள்ள 22 பெட்டிகளில், திருச்சி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 11 பெட்டிகளில் தினமும் கூட்டம் நிரம்பியே காணப்படுவதால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். கோடை விடுமுறையில் திருச்சி மக்கள் பட்ட அவதிக்கு குறைவே கிடையாது எனலாம்.ரயில்வே முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, இ. வேலு, தற்போதைய இணை அமைச்சர் இ. அகமது, தெற்கு ரயில்வே முன்னாள் பொது மேலாளர் ஜயந்த், தற்போதைய பொது மேலாளர் தீபக் கிரிஷன் உள்ளிட்ட ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள் திருச்சி வரும்போதெல்லாம் விரைவில் மலைக்கோட்டை ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்பதை மறுக்காமல் கூறி வந்தனர்.  இதற்கிடையே, வருகிற ஆகஸ்ட் முதல் தேதி அல்லது 15-ம் தேதி முதல் திருச்சியிலிருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படலாம் என்ற தகவல்கள் சில நாள்களுக்கு முன்பு வெளியாகின.  ஆனால், இந்தத் தகவலை ரயில்வே நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிகப் பிரிவு மேலாளர் ஏ.பி. முத்துராமலிங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: "ஆகஸ்ட் 15-ம் தேதி மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதில் உண்மையில்லை. இதுவரை இதற்கான கருத்துருவோ, உத்தரவோ தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் இருந்து திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு வரவில்லை' என தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு திருச்சி பகுதி மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சியிலிருந்து இயக்கப்படுவதற்கு தாமதம் ஏன்? எப்போது இங்கிருந்து இயக்கப்படும்? என்ற கேள்வி ரயில்வே நிர்வாகத்தை நோக்கி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டியது அவர்களின் கடமையே!  கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் கண்துடைப்புதானோ? என்ற நிலை திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.  மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவது என நுகர்வோர் அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், சேவை அமைப்புகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.  போராட்டத்தை தடுப்பதும், திருச்சி பகுதி பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் மலைக்கோட்டை ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவதும் ரயில்வே நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. செவிசாய்க்குமா ரயில்வே நிர்வாகம்?.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Hiii... This is divya... ur story super ah eruku.. But oru sila mistakes eruku thozha.. line's are lengthy and weight thozha… atha matum pathukoinga… padikum pothu kastama eruku thozha… muchu thum katti padikura mathiri eruku thozha…

    பதிலளிநீக்கு