தி. இன்பராஜ்
"இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் (இந்தியாவின் உதவியோடு?) சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதில்தான்.
ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்கு எது?.
ஷஇலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்'
30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும வரும் இந்தப் போருக்கு முடிவு சில நாள்களில் ஏற்பட்டுவிடுமா? என்பது சில அரசியல் தலைவர்களின் கேள்வி.
ஆனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தொடரும் போராட்டங்களின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?.
பரபரப்பான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவதை நேரடியாகப் பார்க்கும் நாம், இந்தியா எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆவலோடு காத்திருப்போமே! அதுபோல் இல்லாமல், என்றோ ஒரு நாள் பாகிஸ்தானிடம் நாம் தோற்ற போட்டியின் மறு ஒளிபரப்பை பார்த்தபடி எப்படியும் இந்தியா வெற்ற பெற வேண்டும் என நினைத்து, இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஆர்வமுடன் பார்ப்பதைப்பூபோல் இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும், இன்னும் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்திக் கூறுவது ஷஇலங்கையில் உடனடியாக வேண்டும் போர் நிறுத்தம்' என்ற ஒற்றை வரி வாசகம்தான்.
கேட்டவுடன் மனதுக்கு இதம் தரும் இந்த வாசகத்தை நோக்கித்தானே நமது பயணம் இருக்க வேண்டும்?. ஆனால் தற்போதைய போராட்டங்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தாலும், குறிக்கோள் எட்டக்கூடியதாக இருக்கிறதா என்பதை போராட்டக்காரர்கள் ஒரு வினாடி நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா (?), உண்ணாவிரதம், மனித சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் என பலகட்டமாக தங்களது எதிர்ப்பைத் தமிழகத்தில் பதிவு செய்த போதிலும், நம் போராட்டத்தின் இலக்கு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்றால், அந்த இடத்தில் ஒரு புள்ளியைக்கூட நம்மால் வைக்க முடியாது; வெற்றிடம்தான்.
ஏனென்றால், சிங்கள அரசை உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யும்படி நாம் (தமிழர்கள்) வலியுறுத்துகிறோம். ஆனால், சிங்கள அரசின் அதிபர் நம்நாட்டிற்கு வந்து, நம் பிரதமரை சந்தித்து, நிதானமாகப் பேசிவிட்டு (ஏன் மனமகிழ்ச்சியோடு உணவும் அருந்தியிருக்கலாம்) தனக்கே உரித்தான பகட்டுச் சிரிப்போடு ஷஇலங்கையில் போர் நிறுத்தம் என்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை' என அறிவிக்கிறார்.
இலங்கையில் இதே வார்த்தையை அவர் கூறும்போது சிங்களவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்வதோடு, தேர்தலில் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்கையும் பதிவு செய்வார்கள். ஆனால், அவர் கூறியது கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவில்.
ராஜபக்ஷ கூறியது அவரது ரத்தத்தில் கலந்த விஷயமாக இருந்தாலும் அவர் கூறிய நேரம், தமிழகத்தில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது என்பதால், அவரது கூற்றை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஷபோரை நிறுத்த மாட்டோம்' ஷதமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை' என்று இந்தியாவில் வந்து கூறும் அளவுக்கு இலங்கை அதிபருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உறுதுணையாக இருப்பது யார்?
இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்பட்டதா? எனப் பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் லாவகமாக பதில் கூறியபடி தப்பிச் செல்லும் தந்திரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்?.
நடைபெற்ற போராட்டங்களை விட்டுவிட்டு இனிவரும் போராட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்தாலும் அதற்கான விடையைத் தேடினாலும் அதற்கான பதிலும், போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4 ஆம் தேதி பிரதமரைச் சந்திப்பது என்பது நல்ல முடிவாக இருந்தாலும், ராஜபக்ஷ இந்தியாவுக்கு வந்து செல்வதற்கு முன் இந்த முடிவை எடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தால் நமது கோரிக்கைக்கு முடிவு கிடைப்பது பற்றி ஓரளவு தகவல் தெùரிந்திருக்கும். இது தாமதமாக எடுத்த முடிவாகவே கருதப்படுகிறது.
புதிய கூட்டணியைத் தேடுவதற்கும், கூட்டணியில் இருந்து சிலரைக் கழற்றி விடுவதற்கும் இலங்கைத் தமிழர் பிரச்னையை கையில் எடுக்காமல், தமிழ் இனத்தின் பரிதாபநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் இப்பிரச்னையை அரசியல் கட்சியினர் கையாள வேண்டிய கட்டாய தருணம் இதுவே.
ஷஊர்கூடி தேர் இழுத்தால்' என்ற வாசகத்தை மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும், ஒன்றுகூடி களத்தில் இறங்கினால் மத்திய அரசு செவி சாய்க்காமலா இருந்துவிடும்.
இதுவரை நடத்திய போராட்டங்களால் இலக்கை நம்மால் எட்டமுடியாவிட்டாலும், இலக்கை அடையும் அளவுக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றுகூடி நடத்தினால் வெற்றி என்ற இலக்கு தேடி வரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால், அதற்குள் இலங்கையில் ஒரு தமிழனாவது உயிரோடு இருக்க வேண்டுமே?.
(இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தினமணியில் பிரசுரமானது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக