காவலர் பணிக்கான உடல் தகுதி: 2 செ.மீ. உயரம் அதிகரிப்பு; இளைஞர்கள் ஏமாற்றம்
First Published : 20 May 2010 02:32:15 AM IST
திருச்சி : தமிழகத்தில் நிகழாண்டில் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளவர்களுக்கு, இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச உயர அளவில் இருந்து 2 செ.மீ. திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டில் 10,000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் நிலைக் காவலர்கள் (9,000), தீயணைப்பாளர்கள் (625), சிறைக் காவலர்கள் (470) என மூன்று பதவிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எழுத்துத் தேர்வு, உடல் திறன் போட்டிகள் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் என்ற அடிப்படையில்தான் இந்தப் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிகமானோர் சீருடைப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குறிப்பாக, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பணியில் சேர அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபக்கம் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் ஓர் அறிவிப்பையும் ஓசையின்றி அறிவித்துள்ளது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம். கடந்தாண்டு வரை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களில் பொதுப் பிரிவு ஆண்களுக்கு குறைந்தபட்ச உயரமாக 168 செ.மீ., பெண்களுக்கு ரூ. 157 செ.மீ. என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 3 செ.மீ. குறைத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போது தேர்வு செய்ய உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச உயரமாக ஆண்களுக்கு 170 செ.மீ., பெண்களுக்கு 159 செ.மீ. என இருக்க வேண்டும் என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10,000 காவலர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் அடிக்கடி அறிவிக்கப்பட்ட போதிலும், எந்தவித ஓசையுமின்றி குறைந்தபட்ச உயரத்தின் அளவை அதிகரித்திருப்பது காவலர் பணியில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணமும் காவல் துறையில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை. தற்போது காவல் துறையில் உயரம் குறைவாக உள்ளவர்கள் பணி செய்வதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா? அப்படி இருந்தால் அதை அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கலாம் என காவலர் தேர்வுக்காக நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.உயரத்துக்கேற்ற மார்பளவு உள்ளவர்கள் ஓரளவு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பது மருத்துவ நிபுணர்களின் கூற்று. அப்படியெனில், உயரத்தை மட்டும் அதிகரித்தவர்கள் உயரத்துக்கு ஏற்ற மார்பளவை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் உயரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டவர்களில் 168 செ.மீ உயரம் உடையவர்கள் நிகழாண்டில் எப்படியும் போராடி பணியில் சேர்ந்துவிடலாம் என எதிர்பார்த்திருந்த இளைஞர்கள் இந்த அறிவிப்பால் திகைத்துள்ளனர்.ஆண்டாண்டு காலமாக இருந்த உயர அளவைத் திடீரென உயர்த்தியதற்கான காரணத்தை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், உயர அளவை மீண்டும் பழைய அளவுக்கே மாற்ற வேண்டும். இது, காவலர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல; காவலர் பணிக்காக வேறு எந்தப் பணிக்கும் செல்லாமல், தங்களுடைய இளமைக் காலத்தை முழுமையாகச் செலவிட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களின் எதிர்பார்ப்பும் இதுவே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக