First Published : 06 May 2010 09:46:29 AM இசட்
திருச்சி, மே 5: அரசு மதுபானக் கடையாக இருந்தாலும், பார்களை நடத்தும் தனிநபர்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் மது விற்பனை மூலம் தனிநபர்கள் அதிக லாபம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் ஏறத்தாழ 32,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கண்காணிப்பாளர் ரூ. 50,000-ம், விற்பனையாளர் ரூ. 15,000-ம் முன்வைப்புத் தொகையாக அரசிடம் செலுத்தினர். தற்போது கண்காணிப்பாளர் ரூ. 4,000, விற்பனையாளர் ரூ. 2,800-மும் ஊதியமாகப் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது 6,500 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 31,500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். டாஸ்மாக் கடைகளின் மூலம் அரசுக்கு கடந்த 2008-09 நிதியாண்டில் கிடைத்த வருவாய் ரூ. 12,800 கோடி. வருவாய் அதிகம் கிடைத்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார, தேசிய விடுமுறைகள் வழங்கப்படுவதில்லை. அந்த நாள்களில் கூடுதல் ஊதியமும் வழங்கப்படுவதில்லை. மேலும், தமிழ்நாடு தொழில்சாலைகள் சட்டப்படி தங்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்று. அரசியல் சாசன விதி 309-ன் படி பணி விதிகளையும், பதவிகளையும் முறையாக உருவாக்க வேண்டும் என்றும் அரசுக்கு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்போது, டாஸ்மாக் எந்தவித வரன்முறையும் இல்லாமல் மாவட்ட மேலாளர் என்ற பதவியில் உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஆனால், அவர்கள் சில தனிநபர்களின் குறிப்பாக, ஆளும் கட்சியினரின் கட்டுக்குள் இருப்பதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட மேலாளர்களாகப் பணியாற்றுபவர்களில் சிலர் தங்களுக்கு கீழே ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி, அதிக விற்பனையாகும் கடைகளை கண்காணிக்கச் செய்வதாகவும், பின்னர் அந்தக் கடையின் கண்காணிப்பாளர், ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்காக கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மாநிலம் முழுவதும் 102 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். இதேபோல, மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 1100 பேர் இடை நீக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. காரணமின்றி இடமாற்றம், இடை நீக்கம் செய்யப்பட்டவர்களை அழைத்துப் பேசும் தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு தங்களது செல்வாக்கு மூலம் அதிகாரிகளிடம் பேசி மீண்டும் அவர்களுக்கு பணி வழங்குகின்றனர். இடமாற்றம், இடை நீக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எந்தவித விதிமுறையையும் கடைப்பிடிக்காமல் தங்களுக்குள்ள அதிகாரத்தை கையில் எடுக்கும் இந்த அதிகாரிகள் "வெறுங்கையில் முழம் அளப்பது போல" ஊழியர்களிடமிருந்து ஒரு தொகையைக் கறந்து விடுகின்றனர். காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியரிடமிருந்து ரூ. 5,000 லஞ்சம் பெற்ற மாவட்ட மேலாளர் அண்மையில் கைது செய்யப்பட்டதும் இந்தவகை மிரட்டல் வழியில்தான். மேலும், சில கடைகளில் திருட்டு நடக்கும்போது அதற்கு ஊழியர்களே பலிகடா ஆக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, முக்கியமான பிரச்னையாக இருப்பது தனியாருக்கு பார் நடத்த அனுமதி வழங்கியதுதான். உள்ளூர் முக்கிய- ஆளும் கட்சிப் பிரமுகர்களால் நடத்தப்படும் இந்த பார்களால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அரசு மதுபானக் கடை என்றபோதிலும், பார் நடத்துவோரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகவும், இதை எதிர்க்கும் ஊழியர்கள் எந்தவிதக் காரணமுமின்றி அதிகாரிகளால் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால், உள்ளூர் பிரமுகர்களால் நடத்தப்படும் பார்களில் இருந்து குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வித தடங்கலும் இல்லாமல் சென்றுவிடுவதாகவும், அவர்கள் ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தாமல் பார் நடத்துவோரின் கட்டுக்குள் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதவிர, மதுபாட்டில்கள் கொண்டு வரப்படும் அட்டைப்பெட்டிகளைக் கையாள்வது, சரக்குகளை கவனமாக இறக்குவது, விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை வங்கியில் செலுத்துவதிலுள்ள சிக்கல்கள் (சென்னை தவிர), ஊக்கத் தொகை வழங்காதது, காரணமின்றி இடமாற்றம், அதிகாரிகளால் எடுக்கப்படும் தேவையற்ற ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு பிரச்னைகளால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர். பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது என்றும், ஊழியர்களின் நலன்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அண்மையில் தனி நீதிபதி கே. சந்துரு தீர்ப்பளித்தார். இதன்படி, அரசு உடனடியாக டாஸ்மாக் நிர்வாகத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் ஊழியர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக