தி.. இன்பராஜ்
First Published : 26 May 2010 03:25:57 AM IST
Last Updated : 26 May 2010 05:59:15 AM IST
திருச்சி : திருட்டு வாகனங்களைக் கண்டுபிடிப்பது, குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவோரைக் கட்டுப்படுத்துவது, பழைய குற்றவாளிகளை அடையாளம் காண்பது, வெளியாள்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது போன்றவையே வாகனத் தணிக்கையின் நோக்கம்.
ஆனால், தமிழகம் முழுவதும் தற்போது நடத்தப்படும் வாகனத் தணிக்கைகளில் இந்த விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படாமல் அபராதம் விதிப்பதையே முதன்மைப் பணியாக கொண்டு போலீஸôர் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொடக்க காலங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம், வாகனக் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்க்கும் போலீஸôர் உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதிப்பர்.
ஆனால், நாளடைவில் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் போலீஸôர் தங்களுக்குத் தேவையான "மாமூலை' பெறத் தொடங்கினர். இதனால், போக்குவரத்து பிரிவுக்குச் செல்ல காவலர்களிடையே கடும் போட்டி நிலவியது.
குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் போதும் அல்லது கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வாகன ஓட்டிகள் நிர்பந்திக்கப்படுவதால் விதிமுறைகளைப் பற்றி அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதில், இன்னொரு பிரச்னையும் உள்ளது. சமூக விரோதிகள், குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் வாகனங்களில் பயணிக்கும் போது ஆயுதங்களை எடுத்துச் சென்றாலும், அவ்வளவு எளிதாக போலீஸôரிடம் சிக்காததற்கு இந்த "மாமுல்' சோதனையும் ஒரு காரணமே!
எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ, அதற்கு எதிர்மாறாக சில காவலர்களின் நடவடிக்கையால் நோக்கம் நிறைவேறாமல் போனது.
தற்போதும், இரு சக்கர வாகனங்கள் மீது காட்டும் தீவிரத்தை போலீஸôர் கார், வேன், தனியார் பேருந்து ஆகியவற்றில் காட்டுவதில்லை. ஏனென்றால், காரில் வருவோரிடம் அபராதம் வசூலித்தால் தங்களது வேலைக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளூர போலீஸôரிடம் இருக்கத்தான் செய்கிறது.
தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சியைப் பொருத்தவரை வாகனத் தணிக்கை என்பது அன்றாடமாகிவிட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. ஒரு லட்சம் வரை அபராதத் தொகை வசூலிப்பதை போலீஸôர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
2008}ம் ஆண்டில் வாகனத் தணிக்கையின்போது வசூலிக்கப்பட்ட தொகை ரூ. ஒரு கோடியே 13 லட்சம். ஆனால், 2009}ம் ஆண்டில் மட்டும் 2 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் ஜனவரி மாதம் ரூ. 36 லட்சத்து 62 ஆயிரமும், பிப்ரவரி மாதம் ரூ. 30 லட்சமும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் சராசரியாக ரூ. 25 லட்சம் வரை வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.
வாகனத் தணிக்கையில் போக்குவரத்து பிரிவு போலீஸôரை தவிர, சட்டம், ஒழுங்குப் பிரிவு, குற்றப் பிரிவு போலீஸôரும் ஈடுபடுத்தப்படுவதால் அவர்களது பணி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரைப் பிடிப்பதற்கு சிரமப்பட்டு, இலக்கை எளிதில் எட்டுவதற்காக அரசு மதுக் கடை "பார்' முன் நின்று கொண்டு கடையில் இருந்து வெளியே வரும் நபர்களை மறித்து, அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்கின்றனர்.
எந்த நோக்கத்துக்காக வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கில் இருந்து விலகிச் செல்லாமல் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டால் போலீஸôருக்கும், அரசுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக