ஞாயிறு, 30 மே, 2010

பதக்க மங்​கை​கள்!


First Published : 30 May 2010 10:21:00 AM IST


பதக்கங்களுடன் வீராங்கனைகள்
தென் கொரியாவில் உருவான தற்காப்புக் கலையான டேக்வாண்டோ தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. கராத்தே போட்டிகளுக்கு இணையாக டேக்வாண்டோ விளையாட்டிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தமிழகத்தைப் பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கைகளையும், கால்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தி விளையாடும் இந்தப் போட்டிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.குஜராத் மாநிலம், சூரத் நகரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான 4-வது சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற 19 மாணவ, மாணவிகளில் 16 பேர் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.தமிழக அணியில் இடம்பெற்றிருந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகளில் 6 பேர் பதக்கம் பெற்றனர். ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களை வீரர்கள் பெற்றனர். இந்தக் குழுவில் இடம்பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளனர்.வெற்றி மகிழ்ச்சியில் ஊர் திரும்பிய பதக்க வீராங்கனைகளான எல். புவனேஸ்வரி (தங்கம்), ஆர். ஜெயஸ்ரீ (வெள்ளி), ஏ. அருள்ஜோதி, ஜி. அனு கீர்த்தனா, எஸ். கண்ணம்மா, வீரர் எம்.ஜி. சந்தோஷ்குமார் (வெண்கலம்) ஆகியோர் திருச்சி புத்தூரில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.தங்கள் அணியின் வெற்றிப் பயணம் குறித்து ஆர்.ஜெயஸ்ரீ பேசினார். ""தமிழக அணியில் 19 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 26 பேர் பங்கேற்றோம். அனைவருமே எங்களுடைய திறமைகளை நன்றாக வெளிப்படுத்தினோம். சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் என திருச்சியில் இருந்து 7 பேர் கலந்து கொண்டோம்.கராத்தே போட்டியில் கைகளுக்கு மட்டுமே அதிக வேலை இருக்கும். ஆனால், டேக்வாண்டோவில் அப்படியில்லை. கைகளைவிடக் கால்களால்தான் அதிகம் விளையாட வேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் டேக்வாண்டோ பயிற்சி அளித்து வரும் திருச்சி டேக்வாண்டோ சங்க பொதுச் செயலர் எம். கணேசன் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.இந்த விளையாட்டில் பெண்களிடம் அதிக ஆர்வம் இருப்பதற்குப் பள்ளி பருவத்திலேயே பயிற்சி அளிக்கப்படுவதுதான் காரணம். உரிய பாதுகாப்பு சாதன வசதிகள் இருப்பதால், எங்களால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் விளையாட முடிகிறது'' என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக